உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருக்கோஷ்டியூரில் மார்ச் 14ல் மாசி தெப்ப உற்ஸவம் மார்ச் 4 முதல் 15ம் தேதி வரை விழா  

திருக்கோஷ்டியூரில் மார்ச் 14ல் மாசி தெப்ப உற்ஸவம் மார்ச் 4 முதல் 15ம் தேதி வரை விழா  

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் மாசி தெப்ப உற்ஸவம் மார்ச் 14ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. திருக்கோஷ்டியூரில் 108 திவ்யதேச கோயில்களில் பாண்டிய தேச 18 கோயிலில் ஒன்றாக சவுமிய நாராயண பெருமாள் கோயில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மாசி மக தெப்ப உற்ஸவம் நடைபெறும். 2025ம் ஆண்டிற்கான மாசி தெப்ப உற்ஸவம் மார்ச் 4ம் தேதி மாலை 5:45 மணிக்கு சேனை முதல்வர் புறப்பாடுடன் துவங்குகிறது. மார்ச் 5ல் காலை 6:40 மணி முதல் 7:28 மணிக்குள் கல்யாண மண்டபம் எழுந்தருளல். இரவு சுவாமி பல்லக்கில்திருவீதி உலா நடைபெறும். தினமும் ஸ்ரீதேவி பூதேவியருடன் சவுமிய நாராயண பெருமாள் சிம்ம, ஹனுமன், தங்க கருடசேவை, தங்க சேஷ வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு நடைபெறும். மார்ச் 10ம் தேதி மாலை திருவீதி புறப்பாடு,அதனை தொடர்ந்து ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெறும். மார்ச் 11 அன்று காலை 10:36 மணி முதல் 11:36 மணிக்குள் தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடுதல் நடைபெறும். அன்று மாலை சூர்ணாபிேஷகம், இரவு தங்க தோளுக்கினியன் திருவீதி புறப்பாடு நடைபெறும். மார்ச் 12ல் இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடு நடக்கும்.மார்ச் 13 அன்று மதியம் 12:50 மணிக்கு வெண்ணை தாழி சேவையில் திருவீதி புறப்பாடு, இரவு 9:30 மணிக்கு வெண்ணை தாழி சேவையில் திருவீதி உலா நடைபெறும்.

மார்ச் 14 ல் மாசி தெப்ப உற்ஸவம்

திருவிழாவின் பத்தாம் நாளான மார்ச் 14 அன்று மதியம் 12:16 மணிக்கு தங்க தோளுக்கினியன் வீதி உலா, அன்று இரவு 10:00 மணிக்கு தெப்பம் கண்டருளல் நிகழ்வு நடைபெறும். அன்று இரவு முழுவதும் ஸ்ரீதேவி பூதேவியருடன் சவுமிய நாராயண பெருமாள் தெப்பத்தில் எழுந்தருள்வார். இத்தெப்ப உற்ஸவத்தை காணவும், நேர்த்தி கடனாகமண் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவதற்காக கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். விழாவின் 11ம் நாளான மார்ச் 15ம் தேதி காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரிஉற்ஸவம் நடைபெறும். இரவு 9:30 மணிக்கு திருவீதி புறப்பாடு, தங்க தோளுக்கினியன் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளலுடன் மாசி தெப்பத்திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை