உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயிர் காப்பீட்டில் புதிய நடைமுறையால் சிக்கல்

பயிர் காப்பீட்டில் புதிய நடைமுறையால் சிக்கல்

சாலைக்கிராமம்: விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கிராமப்புற விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் நடப்பு பருவத்திற்கான பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை விவசாயிகளின் அலைபேசி எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யும் நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், அலைபேசிக்கு ஓ.டி.பி., எண் வருவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, பயிர் காப்பீடு பதிவு செய்யும் முறையில் தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. நேற்று முதல் விவசாயிகளின் கைரேகையைப் பதிவு செய்து பயிர் காப்பீடு செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை கிராமப்புற விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இ-சேவை மையங்களில் கைரேகை களைப் பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 50 வயதுக்கு மேற்பட்ட பல விவசாயிகளின் கைரேகை ஸ்கேனரில் சரியாகப் பதிவாகததால், அவர்களால் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே விவசாயப் பணிகளுக்காக பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்காக இ-சேவை மையங்களுக்கு அலைந்து கைரேகை பதிவாகாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கைரேகை பதிவு செய்வதில் ஏற்படும் சிக்கல்களால் பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும் விவசாயிகள் உள்ளனர். சாலைக்கிராமம் விவசாயிகள் கூறியதாவது, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கைரேகை பதிவு முறையில் உள்ள சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதுடன், முன்பு நடைமுறையில் இருந்ததைப் போல அலைபேசிக்கு வரும் ஓ.டி.பி.,எண் மூலம் எளிதாகப் பயிர் காப்பீடு பதிவு செய்யும் வசதியையும் மீண்டும் ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கைரேகை பதிவாகாத விவசாயிகளுக்கு மாற்று வழிமுறைகளை ஏற்படுத்தி, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் தடையின்றி பயிர் காப்பீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !