உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பன்றிகளால் நெற்பயிர்கள் சேத விபரங்கள் இல்லை

பன்றிகளால் நெற்பயிர்கள் சேத விபரங்கள் இல்லை

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் பன்றிகளால் நெற்பயிர்கள் சேதமடைந்தது குறித்த எந்த கணக்கெடுப்பும் தங்களிடம் இல்லை என வேளாண் துறை தெரிவிப்பதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழையை நம்பி செப்டம்பரில் நெல் சாகுபடி தொடங்கும், திருப்புவனம் வட்டாரத்தில் என்.எல்.ஆர்., கோ 50, கோ 51, ஆர்.என்.ஆர்., அட்சயா ஆர் 4 உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படும், மற்ற பகுதிகளை விட திருப்புவனம் வட்டாரத்தில் நாற்றங்கால் அமைத்து நாற்றுகளை பறித்து அதன்பின் நடவு செய்வது வழக்கம், இதனால் செலவு அதிகரித்தாலும் களைகள் குறைவாகவும் விளைச்சல் அதிகமாகவும் இருக்கும்.10 வருடங்களுக்கு முன்பு வரை திருப்புவனம் வட்டாரத்தில் 14 ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி நடைபெறும், ஆனால் கண்மாய்கள், மற்றும் கருவேல மர காடுகளில் சமீப காலமாக பன்றிகள் கூட்டம் கூட்டமாக தங்கி விவசாயத்தை அழித்து வருகிறது. நாற்றங்காலை சேதப்படுத்துவது தொடங்கி அறுவடை வரை பன்றிகளால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.திருப்புவனம், பிரமனூர், ராங்கியம், பழையனூர், திருப்பாசேத்தி உள்ளிட்ட கண்மாய்களில் ஏராளமான பன்றிகள் உள்ளன. இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் இவை விளைந்த நெற்பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. பன்றிகளை விரட்ட விவசாயிகள் எடுத்தஅனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன. பன்றிகளால் நெற்பயிர்கள் சேதமடைவது குறித்து விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.விவசாயிகள் கூறுகையில்: கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் யானைகளால் விவசாயம் சேதமடையும் போது அதுகுறித்து கணக்கெடுத்து அரசுக்கு வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிப்பதுண்டு, அதற்கு ஏற்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் பன்றிகளால் ஏற்படும் சேதம் குறித்து எந்த வித கணக்கெடுப்பையும் வேளாண் துறை அதிகாரிகள் எடுப்பதில்லை ஐந்து வருடங்களாக விவசாய சாகுபடி பரப்பளவு 40சதவிகிதம் வரை குறைந்துள்ள நிலையில் அதுகுறித்து ஆய்வு செய்ய கூட வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.ஒவ்வொரு வருடமும் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் வருடம்தோறும் சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் நிலையில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை