உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புது அரிசியில் பொங்கல் வைக்க வாய்ப்பில்லை; திருப்புவனம்- விவசாயிகள் வேதனை

புது அரிசியில் பொங்கல் வைக்க வாய்ப்பில்லை; திருப்புவனம்- விவசாயிகள் வேதனை

திருப்புவனம், அக்.10-திருப்புவனம் தாலுகாவில் இந்தாண்டு பொங்கல் திருநாளுக்கு புது அரிசி வைத்து பொங்கல் கொண்டாட வாய்ப்பில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு வருடமும் செப்டம்பரில் தொடங்கும் வடகிழக்கு பருவ மழையை நம்பி வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம், கீழடி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் என்.எல்.ஆர்., கோ50, கோ51, கல்சர் பொன்னி, கருப்பு கவுனி உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்படும். காலம் பருவத்திற்கு நடவு செய்ய வசதியாக விவசாயிகள் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே நாற்றங்கால் அமைக்க தொடங்குவார்கள்.திருப்புவனம் வட்டாரத்தில் நாற்றங்கால் அமைத்து அதன்பின் நாற்று பறித்து நடவு செய்வது வழக்கம், இதற்காக வயல்களின் ஒரு பகுதியில் நாற்றங்கால் அமைப்பார்கள், ஆகஸ்டில் கிணறு வைத்துள்ள விவசாயிகளிடம் தண்ணீர் வாங்கி நாற்றங்கால் அமைத்து நாற்று வளர்த்து விடுவார்கள், செப்டம்பரில் மழை தொடங்கிய பின் நிலத்தை உழவு செய்து நாற்று பறித்து நடவு செய்வார்கள்,மேலும் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவதால் கண்மாய்களில் மழை தண்ணீருடன் வைகை தண்ணீரும் சேர்ந்து விளைச்சல் முழு அளவில் இருக்கும்.கடந்த இரு ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை தவறாது பெய்ததால், நெல் விளைச்சல் அதிகமாக இருந்தது. ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்வது வழக்கம், கிணற்று பாசன விவசாயிகள் டிசம்பரிலேயே அறுவடையை தொடங்கி விடுவார்கள், மற்ற விவசாயிகள் ஜனவரியில் அறுவடை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை தொடங்கவில்லை. வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 15ல் தொடங்கும் என அறிவித்துள்ளது. மழை இல்லாததால் திருப்புவனம் வட்டாரத்தில் நாற்றங்கால் அமைக்கும் பணி நடக்கவே இல்லை. வேளாண் துறை விநியோகித்த விதை நெல் 30 டன்னையும் வாங்கி விவசாயிகள் இருப்பில் வைத்துள்ளனர். திருப்புவனம் வட்டாரத்தில் மாரநாடு, பிரமனூர் உள்ளிட்ட கண்மாய்களில் மட்டும் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளது. அதனையும் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாது. கண்மாயில் தண்ணீர் இருப்பதால் சுற்று வட்டார கிணறுகளில் தண்ணீர் ஊற்று இருக்கும் அவ்வளவு தான்.திருப்புவனம் வட்டாரத்தில் 120 நாள் பயிர்களை தான் விவசாயிகள் நடவு செய்வார்கள். இனி நடவு செய்தாலும் பிப்ரவரி, மார்ச்சில் தான் அறுவடை நடக்கும். எனவே பொங்கலுக்கு புது அரிசி இட்டு புது பானையில் பொங்கல் வைக்க வாய்ப்பில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுவரை பத்து சதவிகிதம் கூட விவசாய பணிகள் தொடங்கப்படவில்லை. திருப்புவனம், அல்லிநகரம், பழையனூர், திருப்பாசேத்தி ,அச்சங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் எல்லாம் எந்த பணிகளும் தொடங்காமல் வெறுமையாக காட்சியளிக்கிறது. வைகை அணை தண்ணீர் செப்டம்பர் முதல் வாரத்தில் கண்மாய்களுக்கு ஒரளவிற்கு திறந்து விட்டிருந்தால் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருப்பார்கள், சிவகங்கை, ராமநாதபுர மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. எனவே விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்காமல் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ