மேலும் செய்திகள்
மழைநீர் தேங்குவதால் பள்ளியில் பாதுகாப்பில்லை
16-Sep-2024
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள கோவிலுார் அரசு பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததாலும் தொடர் மழை காரணமாகவும் சமுதாயக் கூடத்தில் வகுப்பு நடந்து வருகிறது. கோவிலுார் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு போதிய வகுப்பறை கட்டடம் இல்லாததால், மரத்தடியில் வகுப்பு நடந்து வருகிறது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால், மாணவர்கள் அமர்வதற்கு கட்டட வசதி இல்லை. இதனால் ஆறாம் வகுப்பு மாணவர்கள், நெடுஞ்சாலையை கடந்து சென்று அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. மூன்று பிரிவு மாணவர்கள் 113 பேருக்கு ஒரே வகுப்பாக நடைபெறுகிறது. மதிய உணவிற்கு மாணவர்கள்பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் சமுதாய கூடத்திற்கு திரும்ப வருகின்றனர். நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டியிருப்பதால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. பள்ளியில் போதிய வகுப்பறை கட்டட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. மேலும் கனமழை காரணமாக பள்ளி காம்பவுண்ட் சுவரும் உடைந்து விழுந்ததாகவும், விடுமுறை நாள் என்பதால் மாணவர்களுக்கு அபாயம் எதுவும் ஏற்படவில்லை என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.மாணவர்களின் பாதுகாப்பு கருதி போதிய வகுப்பறை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
16-Sep-2024