திருப்புத்துாரில் வீட்டு மின் இணைப்பிற்குரூ.1000 லஞ்சம் பெற்ற மூன்று பேர் கைது
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பை மாற்ற ரூ.1000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய உதவி பொறியாளர், போர்மேன், கான்ட்ராக்டர் ஆகிய மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருப்புத்துாரில் புதுக்கோட்டை ரோடு, கணேஷ் நகரை சேர்ந்தவர் சரவணன் 31. இவர் புதிதாக வீடு கட்டினார். முன்னதாக அப்பணியின்போது மின்வாரியத்திடம் வணிக கட்டணத்தில் மின் இணைப்பு பெற்றிருந்தார். வீடு கட்டி முடித்ததும் வீட்டு இணைப்பாக மாற்றித்தர திருப்புத்துார் நகர் உதவி மின்பொறியாளரிடம் விண்ணப்பித்தார். இதற்கான கட்டணம் ரூ.1200 செலுத்தி விட்டார். வீட்டு மின் இணைப்பாக மாற்றித்தர ரூ.1000 லஞ்சமாக கேட்டுள்ளனர். இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் சரவணன் புகார் அளித்தார். டி.எஸ்.பி., ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர்கள் ஜேசுதாஸ், கண்ணன், எஸ்.ஐ., கோகிலா உட்பட லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மாலை 4:30 மணிக்கு சரவணனிடம் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். நகர் உதவி பொறியாளர் அலுவலகத்தில் இருந்த லைசென்ஸ் பெற்ற கான்ட்ராக்டர் பாண்டியராஜிடம் 35, அவர் அப்பணத்தை கொடுக்கும் போது போலீசார் பாண்டியராஜை கைது செய்தனர். விசாரணையில் அவர் உதவி பொறியாளர் கணபதி 39, போர்மேன் பழனியப்பனுக்காக 52, அப்பணத்தை வாங்கியதாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.