உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பணிச்சுமையால் திணறும் டிக்கெட் பரிசோதகர்கள்

பணிச்சுமையால் திணறும் டிக்கெட் பரிசோதகர்கள்

திருப்புவனம்: காரைக்குடி மண்டலத்தில் போதிய டிக்கெட் பரிசோதகர்கள் இல்லாததால் பஸ்களில் ஆய்வு செய்ய முடியாமல் திணறுகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காரைக்குடி மண்டலத்தில் 11 கிளைகள்மூலம் பத்து ஆண்டுகளுக்கு முன் 220 டவுன் பஸ்களும், 500க்கும் மேற்பட்ட புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன. சமீபத்தில் மஞ்சள், நீல நிற பஸ்கள் ஒவ்வொரு பணிமனைக்கும் இரண்டு முதல் 10 பஸ்கள் வரை வழங்கப்பட்டன. காரைக்குடி மண்டலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் பணியாற்றுகின்றனர். காரைக்குடி மண்டலம் சார்பாக குமுளி, கம்பம், திருச்செந்துார், மதுரை, காரைக்குடி, ராமேஸ்வரம், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.தொலை துார பேருந்துகளில் ஆய்வு செய்ய காரைக்குடி மண்டலத்தில்72 டிக்கெட் பரிசோதகர்கள் பணியில் இருக்க வேண்டும், அரசு பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படுகிறதா, பயணிகளை முறையாக ஏற்றி இறக்குகிறார்களா, பஸ்களில் ஏற்றப்படும் சரக்குகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என டிக்கெட் பரிசோதகர்கள் ஆய்வு செய்வார்கள்.காரைக்குடி மண்டலத்தில் 49 பேர் மட்டுமே பணியில் இருப்பதால் அனைத்து பஸ்களையும் கண்காணிக்க முடிவதில்லை. கண்டக்டராக 15ஆண்டு பணியாற்றினால் டிக்கெட் பரிசோதகராக பதவி உயர்வு கிடைக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு டிக்கெட் பரிசோதகர் 25 பஸ்கள் வரை கண்காணிக்க வேண்டும் என்பதால் பெயரளவிலேயே பரிசோதனை நடைபெறுகின்றன. இதனை தவிர்க்க காரைக்குடி மண்டலத்தில் டிக்கெட் பரிசோதகர் காலிபணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் அப்போதுதான் போக்குவரத்து கழகங்களுக்கு முறையாக வருவாய் கிடைக்கும். மேலும் தொலை தூர பஸ்களில் குறிப்பிட்ட ஆண்டுகள் வரையே கண்டக்டர், டிரைவர்கள் நியமிக்கப்படுவார்கள், அதன்பின் வேறு வழித்தடத்திற்கு மாற்றப்படுவார்கள்.ஆனால் பல ஆண்டுகளாக சிலர் ஒரே வழித்தடத்திலேயே பணியாற்றி வருவதாக புகார் எழுந்துஉள்ளது. எனவே போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூடுதல் டிக்கெட் பரிசோதகர்களை நியமித்து வருவாய் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ