ரோட்டோர ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்
சிவகங்கை: சிவகங்கையின் முக்கிய வீதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கியது. நகரின் அருகாமையில் வாணியங்குடி ஊராட்சி, காஞ்சிரங்கால் ஊராட்சி, சூரக்குளம் உள்ளிட்ட பகுதிகள் விரிவாக்க பகுதியாக உள்ளது. நகரில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாணியங்குடி, காஞ்சிரங்கால் ஊராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இவர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க தினசரி நகருக்குள் வந்து செல்கின்றனர். சிவகங்கையின் மையப்பகுதியை மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை இரண்டாக பிரிக்கிறது. இந்த ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகளால் ரோடு சுருங்கி உள்ளது.நகரின் முக்கிய வீதிகளான காந்திவீதி, மஜீத் ரோடு, தாலுகா அலுவலக ரோடு, நேருபஜார், தெற்கு ராஜ வீதி பஸ் ஸ்டாண்ட் பின்புறம் கலெக்டர் அலுவலக ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருவோர கடைகள் ஆக்கிரமித்து ரோட்டை சுருக்கியுள்ளனர்.இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.சண்முகராஜா கலையரங்கம் அருகே கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு பேர் விபத்தில் உடல் நசுங்கி இறந்துள்ளனர். ஆயுதப்படை குடியிருப்பு ரோட்டில் ஒரு சிறுமி வாகன விபத்தில் இறந்துள்ளார். அரண்மனை வாசலில் இருந்து தாலுகா அலுவலக ரோட்டில் புதிது புதிதாக கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து அமைக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.