வீடுகள் முன்பாக தேங்கும் கழிவு நீரால் அவதி
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வீடுகள் முன்பாக தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதிப்படுகின்றனர். இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் ஊராட்சியில் ஆலமரத்து தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் மழை நீரும் அப்பகுதியை விட்டு வெளியேற எந்த கால்வாய் வசதியும் இல்லை. இதனால் வீடுகள் முன்பாக கழிவுநீர் குட்டை போல் தேங்கி விடுகிறது. மழைக்காலங்களில் பல நாட்களுக்கு தண்ணீர் தேங்கி கொசுக்கள் உருவாவதின் மூலம் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்ட போது, இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும் கால்வாய் அமைக்காமலும் விட்டுள்ளனர். இதனால் ஆலமரத்து தெரு மட்டுமின்றி பல்வேறு தெருக்களில் இருந்தும் கழிவு நீர் வெளியேற எந்த வழியும் இல்லை. எனவே இக்கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, கால்வாய் அமைத்து கழிவு நீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.