அம்மை நோய் தாக்கிய கன்றுகளுக்கு தடுப்பூசி
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் தினமலர் செய்தியை அடுத்து கன்றுகுட்டிகளுக்கு நேற்று கால்நடைத்துறையினர் தடுப்பூசி செலுத்தினர். திருப்புவனம் வட்டாரத்தில் வயல்சேரி, பழையனூர், மடப்புரம், மணல்மேடு, பெத்தானேந்தல், கீழடி, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் வளர்ப்பு பிரதான தொழிலாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கன்று குட்டிகளுக்கு அம்மை நோய் வெகு வேகமாக பரவி வருகிறது. நோய் பாதித்த கன்றுகுட்டிகளின் உடல் முழுவதும் கொப்புளம் தோன்றியுள்ளது. வாய்ப்பகுதி முழுவதும் புண்ணாக மாறியதால் பால் குடிக்க முடியாமல் கன்று குட்டிகள் உயிரிழப்பை சந்தித்து வருகின்றன. இதனால் கால்நடை வளர்ப்பவர்களின் அச்சம் குறித்து தினமலர் நாழிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை மணல்மேடு கிராமத்தில் கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் தலைமையில் கன்றுகுட்டிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.