அனுமந்தக்குடியில் சந்தை கடைகள் கட்டும் பணி முடியாமல், முடிந்ததாக கல்வெட்டு: குழப்பத்தில் கிராம மக்கள்
தேவகோட்டை:கண்ணங்குடி ஒன்றியம் அனுமந்தகுடியில் சந்தைக் கூடம் பணி முடியாமலேயே முடிந்ததாக கல்வெட்டு வைத்திருப்பதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஒன்றியம் அனுமந்தகுடியை மையமாக வைத்து உள்ள கிராமங்களில் 1,000 குடும்பங்கள் வரை வசிக்கின்றனர். வாரச்சந்தை, இறைச்சி சந்தைகள் ரோட்டில் நடப்பதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அனுமந்தக்குடியில் ரூ.41 லட்சத்தில் 2020 ம் ஆண்டிலேயே கட்ட முடிவு செய்திருந்தனர். இந்தநிதியில் கீரணி ரோட்டில் வாரச்சந்தை கடைக்கான கட்டடம் கட்டப்பட்டது. இந்நிலையில் சந்தைக்கான பணிகள் முடிவுற்றது குறித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் முன்னுக்கு பின் முரணான தகவல் இடம் பெற்றுள்ளதால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இப்பணி துவங்கி 2022 ல் முடிவுற்றதாக தகவல் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கட்டி முடித்து 2 ஆண்டுகளை கடந்தும், சந்தைக்கூட பணி முழுமை பெறாமல் உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்தள்ளனர். இது குறித்து அனுமந்தக்குடி ராமன் கூறியதாவது, சந்தை கடைகளுக்கான கட்டுமான பணி முடிவடையாத நிலையில், முடிந்ததாக கல்வெட்டு வைத்தும், 2 ஆண்டுகளை கடந்தும் சந்தை திறக்கப்படாததால், ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்புஏற்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் நடப்பதை அரசு அதிகாரிகள் பார்வையிடுவதேஇல்லை. இதனால் தான் இதுபோன்று முன்னுக்கு பின் முரணான தகவலை கல்வெட்டில் வெளியிட்டுள்ளனர், என்றார். //