நீர்நிலையை மீட்டெடுக்க இணையதளம் துவக்கம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை மீட்டெடுப்போம் மாவட்டத்தை வளமாக்குவோம் என்ற அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்கள் தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை அளிப்பதற்கு ஏதுவாக புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கென மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்கள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை அளிப்பதற்கு ஏதுவாக, www.sivagangapunalvalam.inஎன்ற புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.நீர்நிலைகளை மேம்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் நன்கொடையாளர்கள் நீர்நிலைகளை பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளவும், தங்களின் அலைபேசி மற்றும் இ-மெயில் முகவரியுடன் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு, நீர்நிலைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தங்களது பங்களிப்பை அளிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.மாவட்டத்திலுள்ள 5,910 நீர் நிலைகள் பற்றிய தகவல்களான நீர் நிலை அமைந்துள்ள கிராமம், சர்வே எண், பரப்பளவு, ஆயக்கட்டு பரப்பளவு, அமைவிடம் GPS LOCATION போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளவும் இந்த இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பிய புதுப்பிக்கப்பட வேண்டிய நீர்நிலைகளை தாங்களாவே இந்த இணையதளத்தின் www.sivagangapunalvalam.inமூலம் தேர்வு செய்து கொள்ளலாம். மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவகங்கை மாவட்ட நிலையான இயற்கை வள மேலாண்மை சங்கம் என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கணக்கு எண். 008401000069803 மூலமாக தங்களது நன்கொடை தொகையினை வழங்கிடலாம் என்றார்.