நாட்டாகுடியில் அதிகாரிகள் செய்ய வேண்டியது என்ன
சிவகங்கை; சிவகங்கை அருகே நாட்டாகுடி கிராமத்திற்கு மக்கள் மீண்டும் செல்ல, விவசாயம் மேற்கொள்ள தேவையான பணிகளை அரசு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் மாத்துார் ஊராட்சியின் கீழ் மாத்துார், இலந்தங்குடி, நாட்டாகுடி, பி.வேலாங்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன. தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுநாட்டாகுடி கிராமம் தான். அடிப்படை வசதி இல்லை. தொடர் கொலை போன்ற அச்சத்தால் கிராமத்தை விட்டே மக்கள் வெளியேறி விட்டனர். இக்கிராமம் 2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. நாட்டாகுடி கண்மாய் பாசனம் மூலம் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இங்கு 150 வீடுகளில் மக்கள் வசித்து வந்த நிலையில், இன்றைக்கு அக்கிராமமே காலியாகும் விதத்தில் மக்கள் இடம் பெயர்ந்து விட்டனர். அரசின் கவனத்திற்கு சென்ற பின், அங்கு குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகம் செய்து விட்டது. அதே நேரம்,' வேர்களை தேடி விழுதுகள் வருவது போல்,' மீண்டும் நாட்டாகுடி கிராமத்தில் விவசாயிகள், பொதுமக்கள் குடியேற தேவையான அடிப்படை வசதிகளை அரசு விரைந்து செய்து தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிவகங்கையில் இருந்து நாட்டாகுடிக்கு தினமும் காலை, மாலை அரசு பஸ் வசதி, நாட்டாகுடியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். பாசன கால்வாய்களை துார்வார வேண்டும். கண்மாய் மடைகளை சீரமைக்க வேண்டும். கண்மாய் கலுங்குகளை மாற்றி அமைக்க வேண்டும். திருப்பாச்சேத்தி போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் போது, நாட்டாகுடி கிராமத்திற்குள்ளும் வந்து செல்ல வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரடியாக கிராமத்திற்கு சென்று மக்களுக்கு அரசின் மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து, விவசாயத்தை ஊக்கவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நாட்டாகுடிக்கு பி.வேலாங்குளத்தில் இருந்து டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சாரம் சப்ளை ஆகிறது. நாட்டாகுடியில் மின் பழுது என்றால், 5 கி.மீ., துாரமுள்ள வேலாங்குளம் சென்று தான் பழுது பார்க்க வேண்டும். இதை தவிர்க்க இலந்தங்குடி, நாட்டாகுடிக்கென தனியார் மின் டிரான்ஸ்பார்மர் அமைத்து தடையில்லா மின்சப்ளை செய்ய வேண்டும். இது போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தால், நாட்டாகுடி மக்கள் மீண்டும் கிராமத்தில் குடியேறுவார்கள்.