புதிய தீயணைப்பு நிலையத்திற்கு கட்டட பணிகள் துவங்குவது எப்போது
காரைக்குடி: புதுவயல் பகுதியில் தீயணைப்பு நிலையத்திற்கு இடம் தேர்வு செய்து ஓராண்டாகியும், இதுவரை எந்த பணிகளும் தொடங்கவில்லை. புதுவயல் பகுதியில் ஏராளமான அரிசி ஆலைகள் உள்ளன. அரிசி குடோன்கள் மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்க காரைக்குடி தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனம் வர வேண்டி இருந்தது. 15 கி.மீட்டர் தொலைவிலிருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் மொத்த பொருட்களும் எரிந்து வீணாகிறது. இதனால் புதுவயல் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில், புதுவயலில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் கடந்த 2024 அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்காலிக இடத்தில் தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட்டது. பின்னர் சாக்கோட்டை யூனியன் அலுவலகம், 1.5 ஏக்கர் இடத்தில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதன் அருகே ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஆனால், இடம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டாகியும் தீயணைப்பு நிலைய கட்டடப் பணிகள் தொடங்கப்படவில்லை. தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டட பணியை தொடக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.