காளையார்கோவிலில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் எப்போது
சிவகங்கை: காளையார்கோவில் பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்த போதிய இடவசதியில்லாததால், மதுரை -- தொண்டி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். காளையார்கோவில், முக்கிய நகரங்களை சந்திக்கும் நகராக உள்ளது. இங்கு 2 லட்சம் பேர் வரை வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் வசிப்போர் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் காளையார்கோவிலில் இருந்து தான் செல்ல வேண்டும். குறிப்பாக போதிய பஸ் ஸ்டாண்ட் வசதியின்றி, பஸ்களை மெயின் ரோட்டிலேயே நிறுத்துவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நகருக்கு வெளியே புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.