உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரம் அஜித்குமார் உயிரிழப்பு தகவல் தெரிவித்தது யார்

மடப்புரம் அஜித்குமார் உயிரிழப்பு தகவல் தெரிவித்தது யார்

திருப்புவனம்: நகை திருட்டு வழக்கில் போலீசார் விசாரணையின் போது திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் இறந்த தகவலை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தது யார் என சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரித்தனர். ஜூன் 28ம் தேதி நகை திருட்டு வழக்கு விசாரணையின் போது மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் சித்ரவதை செய்ததில் அஜித்குமார் இறந்தார். தமிழகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் ஜூலை 12 முதல் விசாரித்து வருகின்றனர். இதுவரை 23 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நேற்று மாலை 4:00 மணிக்கு மடப்புரம் வந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அஜித்குமார் சகோதரர் நவீன்குமாரிடம் அஜித்குமார் உயிரிழந்த தகவலை முதன் முதலில் யார் தெரிவித்தது என கேட்டனர். கோயில் எதிரே பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் சுகுமாறன் தெரிவித்ததாக கூறவே சி.பி.ஐ., அதிகாரிகள் மூவரும் சுகுமாறனிடமும் விசாரித்துள்ளனர். அஜித்குமார் நிலை குறித்து அறிய ஜூன் 28 இரவு அவரது உறவினர்கள், பொதுமக்கள் திருப்புவனம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போதைய எஸ்.பி.,ஆஷிஷ்ராவத் இரவு 10:00 மணிக்கு அஜித்குமார் உயிரிழந்து விட்டார் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மதுரை சி.பி.ஐ.,அலுவலகத்தில் அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகைராஜாவிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ