உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே ஸ்டேஷன்களுக்கு நேரடி பஸ் வசதி நிறைவேறுமா; திருப்பத்தூர் ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

ரயில்வே ஸ்டேஷன்களுக்கு நேரடி பஸ் வசதி நிறைவேறுமா; திருப்பத்தூர் ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

திருப்புத்துார்: திருப்புத்துாரிலிருந்து மதுரை, காரைக்குடி, கல்லல் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர். திருப்புத்துார் நகர் முக்கிய போக்குவரத்து மையமாகும். தற்போது 3 தேசிய நெடுஞ்சாலைகள் இப்பகுதியில் உருவாகியுள்ளது. ஆனால் புதிய ரயில்வே பாதை மட்டும் அமைக்கப்படவில்லை. இப்பகுதியினர் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து, புதிய ரயில்பாதைக்கான ஆய்வு நடத்தப்பட்டும் பலனில்லை. இதனால் திருப்புத்துார் சுற்று வட்டார மக்கள் ரயில் பயணம் செய்ய வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு திருப்புத்துாரிலிருந்து நேரடி பஸ் வசதி ஏற்படுத்த அரசை எதிர்பார்க்கின்றனர். தற்போது காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் வழியாக 26 ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம் மட்டுமின்றி பல மாநிலங்களுக்கும் ரயிலில் பயணம் செய்யலாம். அந்த வசதியை முழுமையாக திருப்புத்துார் பயணிகள் பயன்படுத்த நேரடி பஸ் போக்குவரத்து வசதி அவசியம். அதே போன்று கல்லல் ரயில்வே ஸ்டேஷனிலும் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. தேவகோட்டை ரஸ்தாவிலும் குறிப்பிட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. இதில் காரைக்குடி, தேவகோட்டை ரஸ்தா ஸ்டேஷன்களை திருப்புத்துார் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து வசதி குறைவாக உள்ளதால் கல்லல் ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணிகள் குறைவாகவே செல்கின்றனர். இந்த ரயில்வே ஸ்டேஷன்களுக்கு திருப்புத்துாரிலிருந்து நேரடி பஸ் வசதி கிடையாது. முன்பு திருப்புத்துாரிலிருந்து செல்லும் அனைத்து பஸ்களும் ரயில்வே ஸ்டேஷன் வழியாக மதுரை மத்திய பேருந்து நிலையம் வழியாக சென்றன. இது திருப்புத்துார் ரயில் பயணிகளுக்கு வெகுவாக உதவியது. தற்போது பஸ் மாறி செல்ல வேண்டியுள்ளதால் சிரமத்துடன் கூடுதல் நேரமாகி விடுகிறது. அது போல காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கும் செல்ல இரு பஸ்கள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதே போல கல்லலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளதால் பயணிகள் ஸ்டேஷனுக்கு செல்வதே சிரமமாக உள்ளது. இதே போன்று தேவகோட்டை ரஸ்தாவிற்கும் காரைக்குடி சென்றே பஸ் மாற வேண்டியுள்ளது. இதனால் திருப்புத்துார் ரயில் பயணிகள் நேரிடையாக ரயில்வே ஸ்டேஷன் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இப்பகுதியினர் ரயில் பயணங்களை தவிர்க்க வேண்டியுள்ளது. ரயில் பயணிகளுக்கு மட்டுமின்றி மருத்துவ வர்த்தக, கல்வி நிமித்தமாக பஸ் போக்குவரத்தை நம்பியுள்ள அனைவருக்கும் இந்த நேரடி பஸ் வசதி பயன்படும். இதனால் அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோ, கார்களில் பயணம் செய்வதை தவிர்க்கலாம். 'கூடுதல் லக்கேஜ்' களுடன் செல்பவர்கள், முதியவர்கள், உடல் நலமில்லாதவர்களுக்கு, குடும்பமாக செல்பவர்களுக்கு உதவும். ரயில் கால அட்டவணையை வைத்து குறிப்பிட்ட இடைவெளியில் திருப்புத்துாரிலிருந்து காரைக்குடி மற்றும் மதுரைக்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்துவது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S.jayaram
ஜூலை 28, 2025 18:41

பேருந்து நிலையங்களுக்கு கண்டவர்கள் பெயர் வைக்கும் இவர்களா மக்கள் நலன் கருதி ரயில் நிலையங்களுக்கு பேருந்து விடப் போகிறார்கள் பிரிட்டிஷ் காரன் ஒவ்வொரு பெரிய ரயில் நிலையத்தின் அருகிலேயே பஸ்நிலையங்களையும் அமைத்து மக்கள் சிரமப் படாத வகையில் ஏற்பாடு செய்தான் ஆனால் இந்த திமுக ஆட்சியிலோ மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலையினை பேருந்து நிலையங்களை அமைத்துள்ளனர்.குறிப்பாக சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையம், திருச்சி பஞ்சாப்பூர் கருணாநிதி பேருந்து நிலையம் இவைகள் எல்லாம் மக்களுக்கு பேரிடைஞ்சலே இதை மக்கள் தான் சிந்தித்து செயல்பட வேண்டும். அவர்களுக்குத்தேவை மக்கள் நலன் அல்ல, அவர்கள் இஷ்டப்படி பேர் வைக்கணும்.


C.Kumaresan
ஜூலை 28, 2025 13:00

ரயில்கள் வரும்போது, புறப்படுவதற்கு அரைமணி நேரம் முன்பும் பேருந்து வசதி காரைக்குடியில் வேண்டும்.அதுபோல சிங்கம்புணரி,திருப்புத்தூர் வழியாக காரைக்குடி இரயில்வே ஸ்டேஷன் வரை பேருந்து வசதி வேண்டும். அதுபோல மதுரை மற்றும் திண்டுக்கல் இரயில்வே ஸ்டேஷன் வழியாக காரைக்குடி முதல் சென்னை வரை இரயில் இயக்கப்பட்டால் நல்லது. சிங்கம்புணரியிலிருந்து காரைக்குடி பேருந்து நிலையம் சென்று ஆட்டோ கட்டணம் ரூ.100/ ரூ 150 என்று செலவழிக்க வேண்டியுள்ளது. அதுபோல காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் சென்று திருப்புத்தூர், சிங்கம்புணரி குடும்பத்தோடு செல்வது சிரமமாக உள்ளது.


சாமானியன்
ஜூலை 23, 2025 15:49

இது நல்ல யோசனையாகவே தெரிகிறது.விரைந்து பரிசீலக்கவும்.மினி பஸ் விடலாமே.


முக்கிய வீடியோ