தனியார் பங்களிப்புடன் பளிச்சிடும் பாலாறு மழைக்கு முன்பாக பணி துரிதமாகுமா
சிங்கம்புணரி,:சிங்கம்புணரியில் தனியார் பங்களிப்புடன் நடக்கும் பாலாறு சீரமைப்பு பணியை மழைக்கு முன் விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் உருவாகும் பாலாறும், உப்பாறும் சிங்கம்புணரியில் ஒன்றாக கலந்து திருப்புத்துார் வரை செல்கிறது. அங்கிருந்து விருசுழி ஆறு என்ற பெயரில் ஓடி தொண்டி அருகே கடலில் கலக்கிறது. இந்த ஆறுகள் ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங் களால் மறைந்து வந்த நிலையில் இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் தனியார் பங்களிப்புடன் ஆறுகளை சீரமைக்க முடிவு செய்தது. இதற்காக 26 கி.மீ., நீள பாலாறும் இரண்டரை கி.மீ., நீள உப்பாறும் ரூ. 33.39 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டது. தற்போது இப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல இடங்களில் புதர் செடிகள் அகற்றப்பட்டு பளிச்சிடுகிறது. ஆனால் விரைவில் மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் திட்டத்தின் நோக்கம் தாமதமாகி விடும். எனவே மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக மேலப்பட்டி பிள்ளையார்பட்டி அணைக்கட்டில் இருந்து திருப்புத்துார் வரை முழுப்பகுதியையும் விரைந்து சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.