உள்ளூர் செய்திகள்

பரிசீலிக்குமா

திருப்புத்துார்: திருப்புத்துாரில் திருத்தளிநாதர் கோயில் தெப்பக்குளமாக சீதளிகுளம் உள்ளது. நகரின் மையத்தில் 12 படித்துறைகளுடன் 10 ஏக்கரில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்குளத்திற்கு திருப்புத்துார் பெரியகண்மாயிலிருந்து பாசனக் கால்வாய் மூலம் நீர்வரத்து உள்ளது. இதற்கான மேல வாய்க்கால் பராமரிப்பின்றி முற்றிலுமாக துார்ந்து போனது. வடகிழக்கு மூலையில் உள்ள கால்வாய் மூலம் தற்போது நீர்வரத்து உள்ளது.

கழிவால் உடைந்த தடுப்புச்சுவர்

இந்தக்குளத்தை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நகர் மக்கள் குளிக்க பயன்படுத்தி வந்தனர். நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க பயன்பட்டது. 1975ல் வறட்சியால் நீர் வரத்து பாதிக்கப்பட்டு குளம் வறண்டது.அதன் பின்னர் இக்குளத்தை மக்கள் பயன்படுத்துவது குறைந்தது. 1984 ல் அரசு உதவியால் ரூ.20 லட்சம் மதிப்பில் துார் வாரப்பட்டது.அப்போது இக்குளத்திலுள்ள கழிவு அகற்றப்பட்டு வேறிடத்திற்கு அகற்றப்படாமல் கரையைச்சுற்றிலும் கொட்டப்பட்டது. இதனால் கரை அழுத்தமாகி தடுப்புச்சுவர் சரியத் துவங்கின.

வீணடிக்கப்பட்ட நிதி

2001ல் ரூ 1 கோடி அரசு நிதியில் குளம் புனரமைக்கப்பட்டது. அப்போது சரிந்த தடுப்புச் சுவர் வலுப்படுத்தப்பட்டு, நான்கு புறமும் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டது. தரமாக அமைக்கப்படாததாலும், நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும் தரை தளம் உடைந்து உருக்குலைந்து போனது. தற்போது நடைபாதையே இல்லை. படித்துறை சமூக விரோதிகளால் பார்களாக பயன்படுத்தப்படுகிறது. மதுபாட்டில் உடைக்கப்பட்டு மக்கள் படித்துறையைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாற்றியுள்ளனர். மேலும் தடுப்புச்சுவர் அருகில் குப்பை கொட்டப்பட்டு சீதளி கரை முழுவதும் சீர்கேடாகி விட்டது.வீ.கண்ணன் கூறுகையில், முதலில் வரத்துக்கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தவிர்க்க வேண்டும். கரைகள், தெப்ப மண்டபம் பகுதியை துாய்மையாக மாற்றவும், சிறுவர் பூங்கா அமைக்கவும் வேண்டும்.குளத்திலுள்ள தாமரை, அல்லிக் கொடிகளையும், படித்துறைகளில் செடிகளையும் அகற்றி துாய்மையாக்க வேண்டும்.படித்துறைகளில் கேட் போட்டு மக்கள் வருவதை கட்டுப்பாடாக அனுமதிக்க வேண்டும்.நகரின் புனிதமான குளமாக்க மாற்ற வேண்டும்' என்றார்.

கிடப்பில் குளத்தை மேம்படுத்தும் திட்டம்

தற்போது சீதளி குளத்தின் வரத்துக்கால்வாய் கான்கிரீட் வாய்க்காலாக பேரூராட்சியால் மாற்றப்பட்டு வருகிறது. அதை முழுமையாக புரைமைத்து கழிவு நீர் கலக்காமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.அது போல சீதளி குளத்தை மேம்படுத்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ 3 கோடியில் திட்டமிடப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. குளத்தைச் சுற்றிலும் புதர் அகற்றப்பட்டு வேலி, நடைபாதை கழிப்பறை, குளியலறை அமைக்கவும், மூலிகை செடிகள், மரங்கள் நட்டு, இருக்கை, மின் விளக்கு வசதியுடன் பூங்கா அமைத்து துாய்மையான இயற்கைச் சூழலை உருவாக்க திட்டமிடப் பட்டது. ஆனால் நிதி அனுமதியின்றி கை விடப்பட்டது.இத்திட்டத்தை அரசு மீண்டும் பரிசீலித்து தேவையான மாற்றங்களை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை