இறந்த கணவர் உடலுடன் மீட்கப்பட்ட பெண்
திருப்புத்தூர்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் இறந்த கணவரின் உடலுடன் பூட்டிய வீட்டிற்குள் 3 நாட்களாக இருந்த மனநலம் பாதித்த பெண்ணை போலீசார் மீட்டனர்.திருப்புத்துார் முஸ்லிம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆதிரத்தினமூர்த்தி 64. இவர் கல்லுாரி எழுத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மனைவி பரிமளாவுடன் 58, வசித்து வந்தார். குழந்தைகள் இல்லாததால் பரிமளா மனநலம் பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.மூன்று நாட்களாக அவர் கதவை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து தெரு மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கட்டிலில் ஆதிரத்தினமூர்த்தி உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். கணவர் இறந்தது தெரியாமல் மனைவி கட்டில் அருகே தனியாக இருந்துள்ளார். அவரை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.