உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை நகராட்சியில் பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட காலிபணியிடங்களால் பணி முடக்கம்

சிவகங்கை நகராட்சியில் பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட காலிபணியிடங்களால் பணி முடக்கம்

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் கமிஷனரை தவிர மற்ற அனைத்து பணியிடங்களும் காலியாக இருப்பதால் நகராட்சி பணிகள் முடங்கியுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் பொறியாளர், மேலாளர், சுகாதார அலுவலர், ஆய்வாளர், நகரமைப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. சுகாதார அலுவலர்களின்றி மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட பிறப்பு, இறப்பு சான்றுகள், பிழைத் திருத்தம் வழங்குதல் பணிகள் பாதித்துள்ளன. தேவகோட்டை நகராட்சி சுகாதார அலுவலரே கூடுதல் பொறுப்பாக சிவகங்கையில் உள்ளார்.இதனால், பிறப்பு, இறப்பு சான்றுகளில் கையெழுத்திடும் பணி பாதித்துள்ளன. சுகாதார அலுவலர், ஆய்வாளர் பணியிடம் இரண்டும் காலியாக இருப்பதால், நகரில் குப்பை சேகரித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் பெரிதும் பாதித்துள்ளன. நகரில், சி.பி.,காலனி, இந்திராநகர், அகிலாண்டபுரத்தில், பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தெருக்களில் ஓடுகின்றன. பொறியாளர் பணியிடம் காலியாக இருப்பதால் நகராட்சியின் கட்டுமான பணிகள் மேற்பார்வையிடும் பணி கடுமையாக பாதித்துள்ளன.இங்கிருந்த மேலாளர் கென்னடியை பழனி நகராட்சிக்கு மாற்றம் செய்துள்ளனர். தற்சமயம் சிவகங்கை நகராட்சி கமிஷனர் மட்டுமே பணியில் உள்ளார். அவரை தவிர்த்து மற்ற மேலாளர், நகரமைப்பு அலுவலர், சுகாதார அலுவலர், ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் காலியாக இருப்பதால், சிவகங்கை நகராட்சியில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !