ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம்
காரைக்குடி : காரைக்குடி சிக்ரியில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் நடந்தது. பத்திரிக்கை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குனர் பழனிச்சாமி தலைமையேற்று பேசினார். தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவன மண்டல இயக்குனர் சந்தானம், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி ஆணைய துணை ஆணையர் ஷாலினி சுஷ்மிதா, சிக்ரி தலைமை விஞ்ஞானி ஜோனஸ் டேவிட்சன், சிவகங்கை மாவட்ட முன்னோடி வங்கி, ஐ.ஓ.பி., மேலாளர் பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் பேசினர். பத்திரிக்கை தகவல் அலுவலக தொடர்பு அலுவலர் அழகுதுரை வரவேற்றார். விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்மண்டல தலைமை இயக்குனர் பழனிச்சாமி பேசுகையில்: மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சேர்க்க வேண்டும் என்பதே பயிலரங்கத்தின் நோக்கம். உண்மைக்கு புறம்பான செய்திகள் வேகமாக பரவுகிறது. உண்மை செய்திகள் நத்தை வேகத்தில் நகருகிறது. சிந்துார் ஆப்பரேஷனில் பல உண்மைச் செய்திகளும், தவறான செய்திகளும் அதிக அளவில் பரவியது. ரேடியோ வந்தபோது செய்தித்தாள் கதை முடிந்து விடும் என்றார்கள். தொலைக்காட்சி வந்ததும் ரேடியோவும், செய்தித்தாளும் முடிந்து விடும் என்றார்கள். அலைபேசி வந்தபோது அத்தனையும் முடிந்தது என்றார்கள். அறிவியல் வளர்ச்சியை போல் நாமும் வளர்ச்சி பெற வேண்டும். மொழியை வளர்ப்பதிலும், காப்பதிலும் ஊடகவியலாளர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்றார்.