மேலும் செய்திகள்
காளைகளுக்கு போட்டி
03-Dec-2024
திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதி கிராமங்களில் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சு விரட்டுகளுக்கு காளைகளை தயார்படுத்துவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தை பிறந்தால் பயிர் அறுவடை துவங்கும். விவசாய பணிகள் நிறைவடையும் போது பொங்கல் விழா களை கட்டத்துவங்கும். அடுத்து, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து வயல்களில், பொட்டல்களில் மஞ்சுவிரட்டு களை கட்டத் துவங்கும்.இப்போது மஞ்சுவிரட்டு மட்டுமல்ல, வடமாடு மஞ்சுவிரட்டுக்களும் எல்லா நேரங்களிலும் நடத்தப்படுகிறது. இதனால் மஞ்சுவிரட்டுக் காளைகளை தயார்படுத்துவதில் இளைஞர்கள் மும்முரமாக உள்ளனர்.கிராமங்களுக்கு சென்றால் காளைகளுடன் இளைஞர்கள் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி... என்று சுறு சுறுப்பாக இருப்பதை பார்க்க முடிகிறது. திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் பட்டத்தி கண்மாயில் ராவுத்தரய்யா கோயில் காளை உள்ளிட்ட பல புளிக்குளம் நாட்டு காளைகளை குளிப்பாட்டவும், நீச்சல் பயிற்சி அளிப்பதையும் பார்க்க முடிந்தது. அவர்களில் பாண்டி, சதீஸ் ஆகியோர் தெரிவிக்கையில், மூன்று நாள் பயிற்சி, மூன்று நாள் ஓய்வு என்று மாறி,மாறி காளைகளுக்கு பயிற்சி கொடுப்போம். முதல் மூன்று நாள் நீச்சல், அடுத்த மூன்று நாள் தீனி மட்டும், அடுத்த 3 நாட்கள் ஓட்டப்பயிற்சி கொடுக்கப்படும். காளைகள் குத்துவதற்கு என்று பிரத்யேகமாக பயிற்சி தருவதில்லை. இயல்பாகவே காளைகளுக்கு வருவது தான். மண்ணை குத்துவெதெல்லாம் கொம்பில் அரிப்பு ஏற்படுவதால் தான். அது பயிற்சி அல்ல. வடமாடுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும்.களத்தில் 20 நிமிஷம் விளையாட வேண்டும் என்பதால் 40 நிமிடம் நீரில் மூழ்கி நீச்சல் பயிற்சி அளிப்போம். முன்னதாக பயிற்சியின் போது மூச்சுத் திணறாமலிருக்க வெறும் வயிற்றில் மருந்து கொடுத்து விட்டு நீச்சலுக்கு அழைத்துச் செல்வோம். மஞ்சுவிரட்டு காளை என்றால் 20 நிமிடம் பயிற்சி கொடுத்தால் போதும்' என்கின்றனர்.பள்ளி விடுமுறை என்றால் சிறுவர்கள் உற்சாகமாக காளைகளை அழைத்துக் கொண்டு கண்மாய்களுக்கு சென்று விடுகின்றனர்.
03-Dec-2024