உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அலைபேசி டவர் அமைப்பதாக மோசடி வாலிபர் போலீசிடம் ஒப்படைப்பு

அலைபேசி டவர் அமைப்பதாக மோசடி வாலிபர் போலீசிடம் ஒப்படைப்பு

காரைக்குடி: காரைக்குடி அருகே அலைபேசி டவர் அமைப்பதாக கூறி விவசாயிகளிடம் மோசடியில் ஈடுபட்டவரை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சூரக்குடியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரிடம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மத்திய அரசின் திட்டமான அலைபேசி டவர் அமைக்கும் திட்டத்தின், கீழ் விவசாய நிலத்தில் டவர் அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். பதிவுத்தொகையாக ரூ.700 வாங்கியுள்ளார். அதற்கு அடுத்து எந்த பணியும் நடக்கவில்லை. மீண்டும் மற்றொரு இடம் வேண்டுமென்று ராமசாமியிடம் கேட்டவர் மீண்டும் ரூ. 800 கேட்டுள்ளார். சந்தேகமடைந்த ராமசாமி கிராம மக்கள் உதவியுடன் அவரைப் பிடித்து விசாரித்த போது போலியாக இதுபோன்று பல விவசாயிகளிடம் பணம் மோசடி செய்தது தெரிய வந்தது. இளைஞரை செட்டிநாடு போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். ராமசாமி கூறியது: ராமநாதபுரம் அருகேயுள்ள சக்கரவளநாலுாரை சேர்ந்த நிதிஷ் கண்ணன் என்பவர், விவசாய நிலம் இருந்தால் மத்திய அரசு திட்டத்தின் கீழ் அலை பேசி டவர் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்காக 10 வருட ஒப்பந்தத்துடன், ரூ. 8 லட்சத்து 62 ஆயிரம் கிடைக்கும். மாத வாடகை ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என்றார். ஆனால் எதுவும் செய்யவில்லை. இதேபோன்று நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் மோசடி செய்தது தெரிய வந்தது. செட்டிநாடு போலீசாரிடம் தகவல் தெரிவித்து ஒப்படைத்தோம் என்றார். அவரது பைக்கை ஆய்வு செய்த போது அதில் பால்ரஸ் போட்டு சுடும் துப்பாக்கியும் இருந்தது. போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை