செங்கோட்டை அருகே பள்ளி கூரை இடிந்தது
தென்காசி:செங்கோட்டை அருகே அரசு பள்ளியின் பழமையான அலுவலக கட்டடம் இடிந்து விழுந்தது.தென்காசி மாவட்டம், செங்கோட்டையில், ஆரியநல்லுார் அரசு துவக்கப்பள்ளி 1945 முதல் செயல்படுகிறது. இங்கு, 150 மாணவ-ர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில், தொடக்கப்பள்ளி அலுவலர் அலுவலகமும் செயல்படுகிறது.நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. நேற்று காலை மாணவர்கள் பள்ளிக்கு வரத்துவங்கினர். பள்ளிக்குள் மாணவர் செல்லும் பகுதியில் தலைமை ஆசிரியர் அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் நேற்று காலை, 8:00 மணிக்கு தலைமை ஆசிரியர் அறை கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது மாணவர்கள், பணியாளர்கள் அங்கு இல்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.தலைமை ஆசிரியர் உடனடியாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பழமை வாய்ந்த கட்டடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததே இந்த சம்பவத்திற்கு காரணம்.இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, 'பள்ளி மேம்பாட்டு திட்டத்தில், எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த, வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.