உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / கண்டக்டரை காரால் மோதி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன், டிரைவர் கைது

கண்டக்டரை காரால் மோதி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன், டிரைவர் கைது

தென்காசி:தென்காசி அருகே அரசு பஸ் கண்டக்டர் மீது விபத்து போல கார் மோதி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன், கார் டிரைவர் கைது செய்யப்பட்டனர்.தென்காசி, பாவூர்சத்திரம் அருகே மேலப்பட்டமுடையார்புரத்தை சேர்ந்தவர் வேல்துரை 43. பாபநாசம் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டர். மனைவி உமா, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.வேல்துரை, பணிக்கு எளிதில் செல்வதற்காக அடைக்கலபட்டணத்தில் சுதாகர் 41, என்பவது வீட்டில் வாடகைக்கு வசித்தார். வேல்துரை தினமும் பணிக்கு செல்லும் பொழுது டூவீலரை பாவூர்சத்திரத்தில் நிறுத்திவிட்டு பஸ்சில் செல்வார். நேற்று முன்தினம் அதிகாலையில் பாவூர்சத்திரம் நோக்கி டூவீலரில் தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்றார். அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் வேல்துரை, துாக்கி வீசப்பட்டார். தலைக்காயத்தால் சம்பவ இடத்திலேயே இறந்தார். பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்தனர். சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் 36, என்பவரை கைது செய்தனர். விசாரணையில், நடந்தது விபத்த அல்ல, வேல்துரை, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என தெரியவந்தது.வேல்துரை டூவீலரில் ரோட்டின் ஓரமாகத்தான் சென்றுள்ளார். காரை வேண்டுமென்றே இடது ஓரம் சென்று அவர் மீது மோதி விபத்து போல ஆறுமுகம் கொலை செய்தது தெரியவந்தது. வேல்துரையின் மனைவி உமாவிற்கும் வாடகை வீட்டு உரிமையாளர் சுதாகருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. வேல்துரை தினமும் கண்டக்டர் பணிக்கு சென்ற பிறகு, சுதாகர், உமாவுடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அவர்களின் தவறான பழக்கத்திற்கு தடையாக இருந்ததால் உமாவும், சுதாகரும் சேர்ந்து வேல்துரையை கொலை செய்ய திட்டமிட்டு வாடகை கார் டிரைவர் ஆறுமுகத்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. உமா, சுதாகர், ஆறுமுகம் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !