தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியும், மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவரும் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தனர். இருவரும் உறவினர்கள். இருவரும் கடந்த, 24ம் தேதி கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கிய போது, மாணவி திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த மாணவர், லாட்ஜ் ஊழியர்கள் உதவியுடன் மாணவியை, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக குடந்தை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். டாக்டர்கள் மேற்கு போலீசாருக்கு அளித்த தகவலின்படி, போலீசார் மாணவரை பிடித்தனர். மாணவியின் தாய் புகாரின்படி, மாணவனிடம் போலீசார் விசாரித்தனர். இருவரும் கோவிலுக்கு செல்ல வந்தபோது, மாணவிக்கு மாதவிடாய் வந்ததாகவும், அதனால், உடை மாற்றிக்கொள்ள அறை எடுத்து தங்கியதாகவும் கூறியுள்ளார்.மாணவனை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார், தஞ்சாவூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இறந்த மாணவியின் பிரேத பரிசோனை முடிவுகள் வந்த பின், இறப்புக்கான காரணம் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர்.லாட்ஜில் மாணவர், மாணவியை அழைத்து வந்த போது, சிசிடிவி கேமராவில் பதிவாகாமல் இருக்க, லாட்ஜ் பணியாளர்களிடம் அதிக பணம் கொடுத்துள்ளார். அவர்களும் பணத்தை பெற்று, முகவரி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யாமல் இருந்ததும், கேமராவை அணைத்து வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அவர்களிடம் விசாரணை நடக்கிறது.