உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா நீர்நிலைகளில் ஏராளமானோர் வழிபாடு 

காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா நீர்நிலைகளில் ஏராளமானோர் வழிபாடு 

தஞ்சாவூர்:ஆடி மாதம் 18வது நாளில், ஆடிப்பெருக்கு எனப்படும் விழாவை காவிரி கரையோர மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதில், காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் காவிரி ஆற்று கரையில் அரிசி, பழங்கள், அவல், காதோலைகருகமணியை வைத்து படையலிட்டு வழிபாடு செய்வது பராம்பரிய ஒன்றாக உள்ளது. அதே போல், சுமங்கலிப் பெண்கள் தங்களுடைய வாழ்வும், வளமும் நன்றாக இருக்க வேண்டும் என காவிரி தாயிடம் வேண்டுக்கொண்டு, ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் தாலியைஅணிந்து கொள்வர்கள். புதுமணத் தம்பதிகள் தங்களது திருமணத்தின்போது அணிந்த மாலைகளை வீட்டில் பத்திரப்படுத்தி, ஓடும் நீரில் விட்டு விட்டு, தாலி கயிற்றை பிரித்து புதிய தாலிக்கயிற்றை அணிந்து கொள்வது மரபு.அதன்படி நேற்று காலை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ய மண்டப படித்துறையில், காவிரித்தாய்க்கு படையலிட்டு, சுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். புதுமணத் தம்பதிகள் பலரும் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வணங்கினர். அப்போது, திருவையாறு பாரதி இயக்கத்தினர் சார்பில், புதுமணத் தம்பதிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அதே போல், தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றின் படித்துறை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் காவிரி, வெண்ணாறு கரைகளில் ஏராளமானோர் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ