உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தென்பெரம்பூர் அணையில் கான்கிரீட் பணிகள் * கல்லணை இன்று திறக்கும் நிலையில் அவசர கதி

தென்பெரம்பூர் அணையில் கான்கிரீட் பணிகள் * கல்லணை இன்று திறக்கும் நிலையில் அவசர கதி

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், தென்பெரம்பூரில் உள்ள அணைக்கட்டில் இருந்து வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, ஜம்புகாவேரி வாய்க்கால், ராஜேந்திரம் வாய்க்கால் பிரிந்து செல்கின்றன. கடந்தாண்டு ஜம்புகாவேரி வாய்க்கால் தலைப்பு பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டு பக்கவாட்டுச்சுவர் சேதமானது. இதையடுத்து, நீர்வள ஆதார துறையினர் உனடியாக அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி, தற்காலிகமாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இந்தாண்டு, ஜம்புகாவேரியில், 80 மீட்டருக்கு கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்படுகிறது.மேலும், தலைப்பு பகுதியிலிருந்து, 1 கி.மீ.,க்கு துார்வாரப்பட்டு, இரு கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல வெண்ணாறு, வடவாறு, தலைப்புகளிலும் கரைகள் பலப்படுத்தப்பட்டு அப்பகுதியில் பல்வேறு கட்டுமானங்கள், 3 கோடி ரூபாயில் செய்யப்படுகின்றன. மேலும், வெண்ணாறில் ஏழு, வெட்டாறில் ஆறு, வடவாறு மூன்று பழுதான, 'ஷட்டர்'கள் ஒரு கோடி ரூபாயில் புதிதாக அமைக்கும் பணி நடைபெறுகிறது.இந்நிலையில், மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், இன்று 31ம் தேதி கல்லணையில் இருந்து திறக்கும் நிலையில், தென்பெரம்பூர் அணையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அவசர கதியில் பணிகளை செய்கின்றனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:வெண்ணாறு, வடவாறு தலைப்புகளில் கான்கிரீட் பணி துரிதமாக நடக்கிறது. இப்பணியை தண்ணீர் திறப்புக்கு முதல் நாள் வரை செய்வது தான் வேடிக்கையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நீர்வளத்துறை அலுவலர்கள், அணைகளில் தண்ணீர் வரும் நேரத்தில், அவசர கதியில் பணிகளை செய்வது வாடிக்கையாக உள்ளது.துார் வாரும் பணியும் அப்படித் தான் நடக்கிறது. இது, அடுத்தாண்டு சேதமடைய வாய்ப்பு உள்ளது. அப்படி சேதமடைந்தால், அதற்கு என ஒரு செலவு கணக்கு எழுத நினைக்கின்றனர். இதை முறையாக மார்ச், ஏப்., மாதங்களில் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.அத்துடன் பல ஷட்டர்கள் துரு பிடித்து உள்ளன. இதை பெயின்ட் அடித்து மறைத்து வருகின்றனர். நீர்வளத்துறை அலுவலர்கள் விவசாயிகளை ஏமாற்றுகின்றனர், முதல்வரை ஏமாற்றுகின்றனர். இது ஏன் என புரியவில்லை.இவ்வாறு தெரிவித்தனர்.நீர்வளத்துறை அலுவலர் ஒருவர் கூறும் போது,'கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டால், 10 மணி நேரத்தில், வெண்ணாறு மூலம் தென்பெரம்பூர் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். வெண்ணாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, இந்த பகுதிக்கு வரும் முன் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ