தஞ்சாவூர் : தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஹிந்து எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர் சந்தோஷ்குமார், 29. இவர், ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற அமைப்பின் சார்பில், ஜூன் 24 முதல், 30ம் தேதி வரை, கோவாவில் நடந்த, வைஷ்விக் ஹிந்து ராஷ்ட்ர மஹோத்ஸவ் என்ற தேசிய மாநாட்டில் பங்கேற்றார். இதில், நாட்டின் பல்வேறு ஹிந்து அமைப்பு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.அந்த மாநாட்டில், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் 200 கோயில்கள் அரசால் இடிக்கப்பட்டதாக கூறியதாக கூறப்படுகிறது. மேலும், அது தொடர்பான தகவல்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலை தளங்களில் சந்தோஷ்குமார் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தி.மு.க., அரசை விமர்சித்து, அவதுாறு பரப்பும் வகையில், கருத்து வெளியிட்டு, பேசிய சந்தோஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி, தஞ்சாவூரைச் சேர்ந்த லெனின், 45, என்பவர் கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.புகாரின்படி, அரசு மீது அவதுாறு பரப்பியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இதற்கு, ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.