ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு உத்தரவு
தஞ்சாவூர்:தஞ்சாவூர், விக்டோரியா காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன், 37, மருந்து மொத்த விற்பனையாளர். இவர் தன் நண்பரான, தஞ்சாவூர் வடக்கு அலங்கம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பா என்பவருக்கு, ஐந்து லட்சம் ரூபாயை கடனாக வழங்கி இருந்தார். அதற்கு ஈடாக அந்த நபர், சுப்பிரமணியனுக்கு காசோலைகள் கொடுத்திருந்தார்.குறிப்பிட்ட நாளில் அந்த காசோலைகளை சுப்பிரமணியன் வங்கியில் செலுத்திய போது, 'அந்த காசோலைகளுக்கு பணம் இல்லை என்பதால், நிறுத்தி வையுங்கள்' என, அய்யப்பன் கூறினார். அதன்படி, அந்த காசோலைகளை வங்கி நிர்வாகம் நிறுத்தி வைத்தது.அதன்பின், பலமுறை வங்கி மற்றும் அய்யப்பனை அணுகியும், சரியான பதில் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், வங்கியிலிருந்த காசோலைகளை அய்யப்பன் பெற்றுச் சென்று விட்டார்.இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வங்கி மீது வழக்கு தொடர்ந்தார். ஆணையத்தலைவர் சேகர், உறுப்பினர் வேலுமணி ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு:அய்யப்பன் அளித்த காசோலைகள் வாயிலாக கிடைக்க வேண்டிய ஐந்து லட்சம் ரூபாயை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வழங்க வேண்டும். மேலும், வங்கியின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். வழக்கு செலவுத்தொகையாக 10,000 ரூபாயும் என, மொத்தம், 15.10 லட்சம் ரூபாயை, 45 நாட்களுக்குள் சுப்பிரமணியனுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்ப்பளித்தனர்.