குடிநீரில் கழிவுநீர் கலப்பு 25 பேருக்கு மஞ்சள் காமாலை
தஞ்சாவூர்: கும்பகோணத்தில், கழிவுநீர் கலந்த குடிநீரை பயன்படுத்தியதால், 25 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பெருமாண்டி மாதாகோவில் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, இரண்டு மாதங்களாக, குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக, மாநகராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்தியதால், அப்பகுதியில், 12 குழந்தைகள் உட்பட, 25 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதில், ஐந்துக்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையிலும், கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். மேலக்காவேரி, பெருமாண்டி பகுதியில், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று முகாம் நடத்தி, மருத்துவ பரிசோதனை செய்தனர்.