பெண் வயிற்றில் 30 கிலோ கட்டி; கலெக்டர் உத்தரவால் சிகிச்சை
தஞ்சாவூர் ; தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகா அபிலேஷ் பேகம். இவர், கடந்த, 4ம் தேதி நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில், சில ஆண்டுகளாக வயிறு பெரிதாக இருப்பதாகவும், அதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் உதவித்தொகை அளிக்குமாறும் கோரி மனு அளித்தார்.இதைப்பார்த்த கலெக்டர் பிரியங்கா பங்கஜம், உடனடியாக மாவட்ட சமூக நல அலுவலர்களிடமும், தஞ்சாவூர் மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனிடமும் தொடர்பு கொண்டு, மகா அபிலேஷ் பேகத்துக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகா அபிலேஷ் பேகத்திற்கு வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து, மகா அபிலேஷ் பேகம் நலமுடன் இருப்பதை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.