டெல்டாவில் குறுவை சாகுபடி 62.19 சதவீதம் பரப்பு அதிகரிப்பு
தஞ்சாவூர்:டெல்டா மாவட்டங்களில், கடந்தாண்டை விட, 62.19 சதவீதம் குறுவை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், 1.96 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை மிஞ்சி, 1.97 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 1.77 லட்சம் ஏக்கரை மிஞ்சி, 1.93 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில், 60,000 ஏக்கர் என்ற இலக்கை மிஞ்சி, 75,250 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில், 98,850 ஏக்கர் என்ற இலக்கை மிஞ்சி, 99,253 ஏக்கரிலும் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில், 5.32 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 5.66 லட்சம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், நாகை மாவட்டத்தில், 15,250 ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில், 16,000 ஏக்கரும் இலக்கை விட கூடுதலாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை, 28ல், மேட்டூர் அணையில் இருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால், தஞ்சாவூரில், 1.52 லட்சம் ஏக்கரிலும், திருவாரூரில், 98,706 ஏக்கரிலும், நாகையில், 4,288 ஏக்கரிலும், மயிலாடுதுறையில், 96,843 ஏக்கரிலும் என மொத்தம், 3.52 லட்சம் ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. நடப்பாண்டு, 5.66 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், கடந்தாண்டை விட, இந்த ஆண்டு குறுவை சாகுபடி, 62.19 சதவீதம் அதிகரித்துள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'டெல்டா மாவட்டங்களில், பல இடங்களில் துார் வாரும் பணிகள் முறையாக நடைபெறுவதில்லை. தண்ணீர் முறையாக வரும் பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடியை முழுமையாக செய்கின்றனர். இலவச மின்சார திட்டத்தால், பம்புசெட் அதிகரித்ததன் மூலம் மட்டுமே, டெல்டாவில் குறுவை சாகுபடி இலக்கு அதிகரித்துள்ளது' என்றனர்.