சர்ச் விழாவில் கோஷ்டி மோதல் கிராம மக்கள் சாலை மறியல்
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே புனித அந்தோணியார் சர்ச் சப்பரத் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் அருகே ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில், புனித அந்தோணியார் சர்ச் சப்பரத் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது போதையில் வந்த சிலர் தகராறு செய்தனர். இதனால் இரண்டு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது.இதில், அதே கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின், 40, என்பவர் தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து, சப்பரம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஸ்டாலின் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து, கிராம மக்கள் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதில், ஆத்திரமடைந்த அவர்கள், நேற்று காலை, தஞ்சாவூர் -- திருவையாறு சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவையாறு போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிட செய்தனர். இதனால், அப்பகுதியில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.