பா.ஜ., முன்னாள் பெண் நிர்வாகி தலை துண்டித்து படுகொலை இரண்டாம் கணவர், மகன் உட்பட 4 பேர் சிக்கினர்
தஞ்சாவூர்:தஞ்சை அருகே பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் பெண் நிர்வாகி ஒருவர், தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், ஈடுபட்டதாக, அவரது இரண்டாவது கணவர், அவரது மகன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் சந்தையை சேர்ந்தவர் பாலன், 45; பா.ஜ., பொருளாதார பிரிவு மாநில செயலராக இருந்தவர். டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜி, மகன் கபிலன், 20.இந்நிலையில், கொண்டிக்குளம், சர்கார் தோப்பைச் சேர்ந்த கணவனை இழந்த சரண்யா, 38, என்பவரை பாலன் இரண்டாவதாக திருமணம் செய்தார். மேலும், சரண்யாவிற்கு, பா.ஜ., மகளிரணியில் பொறுப்பும் வாங்கிக் கொடுத்தார். இவர்கள், உதயசூரியபுரத்தில் வாடகை வீட்டில் வசித்தனர்.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, தெருவில் வைத்து சரண்யா தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். வாட்டாத்திக்கோட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி, குற்றவாளிகளை தேடினர்.இதற்கிடையில், நேற்று காலை, கபிலன், 20, அவரது நண்பர் குகன், 24, கொண்டிக்குளம், சர்கார்தோப்பு பார்த்திபன், 34, ஆகிய மூவரும், இந்த கொலை தொடர்பாக மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர்.இதில், 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. பாலன், இந்த சொத்தை கபிலனுக்கு வாங்கித்தர, அதை எதிர்த்து சரண்யா தகராறு செய்ததால், தந்தை, மகன் சேர்ந்து கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.பாலனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
யார் இந்த சரண்யா?
கடந்த 2022ல், தி.மு.க., அமைச்சர் தியாகராஜன் கார் மீது, பா.ஜ.,வினரால் செருப்பு வீசப்பட்டது. இதில், மதுரை மத்திய தொகுதி மாநகர் பா.ஜ., மகளிரணி பொறுப்பில் இருந்த சரண்யா மற்றும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது, தியாகராஜன், அந்த பெண் வீசிய செருப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, 'சிண்ட்ரெல்லாவின் செருப்பை பெற்றுக் கொள்ளலாம்' எனக் கூறினார். அப்போது முதல், சரண்யா, தன் பெயருக்கு முன் சிண்ட்ரெல்லா என, சேர்த்துக் கொண்டார். கட்சியினரும், 'சிண்ட்ரெல்லா' என அழைத்தனர். கடந்த ஆண்டு முதல் சரண்யா, கட்சியில் இருந்து விலகி, எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.