உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / அவமதித்த அ.தி.மு.க., -- மா.செ.,வால் தி.மு.க.,வுக்கு தாவிய 4 கவுன்சிலர்கள் பட்டுக்கோட்டையில் பரபரப்பு

அவமதித்த அ.தி.மு.க., -- மா.செ.,வால் தி.மு.க.,வுக்கு தாவிய 4 கவுன்சிலர்கள் பட்டுக்கோட்டையில் பரபரப்பு

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க., நகராட்சி கவுன்சிலர்கள் நான்கு பேர் நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில், 33வது வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க., -- 12; சுயேட்சை - 7; அ.தி.மு.க., -- 13; ம.தி.மு.க., -- 1 வீதம் கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில், தி.மு.க., நகர செயலரும், நகராட்சி சேர்மன் சண்முகபிரியாவின் கணவருமான செந்தில்குமார் முன்னிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர்கள் குமணன், சுரேஷ், ஜெயராமன் மற்றும் லதா ஆண்ட்ரூஸ் ஆகிய நான்கு பேரும், நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர். தி.மு.க.,வில் இணைந்த கவுன்சிலர்கள் கூறியதாவது: பட்டுக்கோட்டையில், அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சேகர், எங்களை அரவணைத்து செல்லவில்லை. கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல் குறித்து சொன்னபோது, காது கொடுத்து கேட்கவில்லை. சமீபத்தில் கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதை தன்னிச்சையாக நடத்தி முடித்தார். யாரிடமும் ஆலோசிக்கவில்லை. அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவருக்கும், நகர நல அலுவலருக்கும் இடையே சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, நகர நல அலுவலர் அளித்த புகாரில், போலீசார் கவுன்சிலர் மீது வழக்கு போட்டனர். இதை வாபஸ் பெற வைக்க, தி.மு.க., நகர செயலர் மூலம் முயற்சித்தோம். உடனே அவர் செய்து கொடுத்தார். இது, கட்சியின் மா.செ.,வுக்கு பிடிக்கவில்லை. எங்களை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தினார். 'கட்சியை விட்டு வெளியேறுங்கள்' என்று சொன்னார். அதன் பின்பும் கட்சியில் இருக்க விரும்பவில்லை. மரியாதை உள்ள இடமான தி.மு.க.,வுக்கு செல்வோம் என முடிவெடுத்து, கட்சி மாறி விட்டோம். மேலும் சில அ.தி.மு.க., கவுன்சிலர்களும், தி.மு.க.,வில் இணைய உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ