ஆடுதுறை சேர்மன் கொலை முயற்சி வழக்கில் முக்கிய நபர்கள் கைது
தஞ்சாவூர்:ஆடுதுறை சேர்மன் கொலை முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ஸ்டாலினை, செப்., 5ல் நாட்டு வெடிக்குண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது. திருவிடைமருதுார் போலீசார் விசாரித்தனர். இதில், நாட்டு வெடி தயாரித்துக் கொடுத்த உடையாளூரை சேர்ந்த லட்சுமணன், செப்., 9ல் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில், திருவிடைமருதுாரை சேர்ந்த மகேஷ், மருதுபாண்டி, சஞ்சய், சேரன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தகவலில், மதுரையில் பதுங்கியிருந்த ஹரிஹரன், 20, அவரது உறவினர்களான மகாலிங்கம், 23, கும்பகோணம் பாணாதுறை விஜய், 27, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். போலீசார் கூறுகையில், 'ஸ்டாலினின் தம்பி ராஜா 2015ல் கொல்லப்பட்டார். இது தொடர்பாக லாலி மணிகண்டன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வந்த லாலிமணிகண்டனை, 2015 ஆக., 26ல், கோவை, சூலுாரில் வழிமறித்தும், துப்பாக்கியால் சுட்டும், மாதவன் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதில், லாலி மணிகண்டன் உட்பட சிலர் தப்பினர். 'தற்போது லாலி மணிகண்டன் சேலம் சிறையில் உள்ளார். மாதவன் உட்பட மூன்று பேர் கொலை வழக்கில், ஸ்டாலின் குற்றவாளியாக உள்ளார். மாதவனின் மகன் ஹரிஹரன், தன் தந்தை கொலைக்கு பழிதீர்க்க ஸ்டாலினை கொல்ல 10 ஆண்டுகளாக காத்திருந்து, முயற்சி செய்தது தெரியவந்தது' என, தெரிவித்தனர்.