சி.பி.சி.ஐ.டி.,க்கு மாறுகிறது வக்கீல் கொலை வழக்கு
தஞ்சாவூர்:திருவாரூர் மாவட்டம், முனியூரை சேர்ந்த ராஜ்குமார். வக்கீலான இவரை, கடந்த 2020ல் அரித்துவாரமங்கலம் போலீசார், அவமானப்படுத்தும் விதமாக கைது செய்தனர். ஜாமினில் வந்த அவர், மாநில உள்துறைச் செயலர், போலீஸ் துறை தலைமை இயக்குனர், மாநில எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தில், அரித்துவாரமங்கலம் போலீஸ் எஸ்.ஐ., மீது புகார் அளித்தார். மேலும், தொடர்புடைய எஸ்.ஐ., மீது தஞ்சாவூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தீண்டாமை ஒழிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், ராஜ்குமார், அடுத்த சில மாதங்களில் கொலை செய்யப்பட்டார். கணவர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் அவரது மனைவி சந்தியா கோரினார். மாவட்ட அமர்வு நீதிமன்றத்தை அணுகி, தீர்வு காணுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இது தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்தியா வழக்கு தொடர்ந்தார். அதன்படி, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த வேண்டும்; குற்றப் பத்திரிகையை ஏப்ரல் 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.