மாணவியருக்கு தொந்தரவு கணித ஆசிரியர் கைது
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன், 35, பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் மீது அப்பள்ளி மாணவியரின் பெற்றோர் சிலர், 'சைல்ட் ஹெல்ப் லைன்' அமைப்பினருக்கு புகார் அளித்தனர். அதில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவியரிடம், முத்துக்குமரன் பாலியல் ரீதியாக தொந்தரவு அளிப்பதாக தெரிவித்திருந்தனர்.இதையடுத்து, தங்களின் விசாரணை அறிக்கையை 'சைல்ட் ஹெல்ப் லைன்' அமைப்பினர் முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்தனர். ஆசிரியர் முத்துக்குமரன் கடந்த ஆக., 14ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதற்கிடையே, சைல்டு ஹெல்ப் லைன் வழக்கு பணியாளர் செண்பகமலர் நேற்று முன்தினம், முத்துக்குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' பிரிவில் முத்துக்குமரனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.