கல்லணைக்கு கவுரவம் அஞ்சல் முத்திரை வெளியீடு
தஞ்சாவூர்:கல்லணை அணையின் வரலாற்றை பிரதிபலிக்கும் நிரந்தர அஞ்சல் முத்திரை, தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அணையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், தோகூர் துணை அஞ்சலகத்தில், மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி, கல்லணைக்கு நிரந்தர அஞ்சல் முத்திரையை நேற்று வெளியிட்டார். அப்போது நிர்மலா தேவி பேசியதாவது: கல்லணை, தமிழரின் பொறியியல் திறமை, நீர்ப்பாசன அறிவு மற்றும் நிலைத்த வள மேலாண்மையின் சான்றாக விளங்குகிறது. சோழர்கள், விவசாயத்தையே பொருளாதார அடித்தளமாக கொண்டவர்கள் என்பதால், தங்கள் ஆட்சி காலத்தில் நீர்ப்பாசனத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். கல்லணையின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், கலைமிகு நிரந்தர அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.