தனியார் மினி பஸ் டிரைவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பசுபதிகோவில் பகுதியை சேர்ந்தவர் சிவா, 28; மினி பஸ் டிரைவர். இவர், நேற்று கண்டியூரில் இருந்து அய்யம்பேட்டை வரை பஸ்சை இயக்கி வந்தார். பிறகு, தஞ்சாவூர்- - கும்பகோணம் பிரதான சாலையில் வழக்கமான இடத்தில் பஸ்சை ஓரமாக நிறுத்தி விட்டு, கண்டக்டர் ரவியுடன் டீ குடிக்க சென்றார்.அப்போது, டூ - வீலரில், முகமூடி அணிந்து வந்த மூன்று பேர், சிவாவை நடுரோட்டில் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.அப்பகுதி பொதுமக்கள், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தஞ்சாவூர் - -கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ்ராவத் மற்றும் அய்யம்பேட்டை போலீசார், பேச்சு நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என உறுதியளித்ததன்படி, போராட்டம் கைவிடப்பட்டது.