தஞ்சாவூர் : பேராவூரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, தலா 250 கிலோ எடையுள்ள இரு இரும்பு பெட்டகங்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர். மேலும், 12 சவரன் தங்க நகை மற்றும் 12 கிலோ வெள்ளிப்பொருட்களும் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேவசேனன், 66. இவரது மகன் லண்டனில் பணியாற்றுகிறார்; மருமகள் கடலுாரில் தங்கி மருத்துவ மேற்படிப்பு படிக்கிறார். இந்நிலையில், தேவசேனன் அவரது மனைவி பூங்கோதை இருவரும், வீட்டைப் பூட்டி விட்டு, மார்ச் 22ல், மருமகள் அஸ்வினியை பார்க்க, கடலுார் சென்று இருந்தனர். இதையடுத்து, இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த இரு இரும்பு பெட்டகங்களை துாக்கி சென்றுள்ளனர்.மார்ச் 24ம் தேதி காலை, வீட்டு வேலை பார்க்கும் பெண், வீட்டின் வெளியே துாய்மை செய்ய வந்தார். அப்போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து, தேவசேனனுக்கு தகவல் தெரிவித்தார்.நேற்று முன்தினம் கடலுாரில் இருந்து திரும்பிய தேவசேனன், சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, மாடி மற்றும் தரை தளத்தில் இருந்த 250 கிலோ எடையிலான இரண்டு திண்டுக்கல் இரும்பு பெட்டகத்தை துாக்கி, 80 அடி துாரத்திற்கு, வீட்டின் பின்புறம் இழுத்துச் சென்று, வாகனத்தில் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது.இந்த பெட்டகங்களில், 12 கிலோ வெள்ளி பொருட்கள், 12 சவரன் தங்க நகைகள் இருந்தன என தேவசேனன் கூறினார். கடந்த ஓராண்டில் மருங்கப்பள்ளம், நாடியம், ஊடையக்காடு பகுதிகளில் ஆளில்லாத வீடுகளை குறி வைத்து, ஆறு வீடுகளில் கொள்ளையர்கள் திருடியுள்ளனர். ஆனால், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்கியது எப்படி
அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட, எளிதில் நகர்த்த முடியாத இரும்பு பெட்டகங்களை, ஒழுக்கறை பெட்டி என அழைப்பர். அதையே, இந்த கொள்ளையர்கள் நகர்த்தி சென்று, அதிலிருந்த பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.சாதாரணமாக, இரும்பு பெட்டகங்களை ஓர் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு குறைந்தது ஆறு பேருக்கு மேல் தேவைப்படும். இந்நிலையில், மாடியிலிருந்து இறக்கி, 500 கிலோ எடையிலான இரு இரும்பு பெட்டகங்களை கொள்ளையர்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.