| ADDED : ஜன 14, 2025 05:31 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே, புதிய புறவழிச்சாலை (என்.எச்.45 சி) 164.28 கிலோ மீட்டர் துாரம் அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது. இதில், தஞ்சாவூர் - சோழபுரம் இடையே 47.84 கி.மீட்டர் துாரம் ஒரு தொகுப்பாகவும், சோழபுரம் - சேத்தியாதோப்பு இடையே 50.48 கி.மீட்டர் துாரம் மற்றொரு தொகுப்பாகவும் என இரு தொகுப்புகளையும் படேல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.சேத்தியாதோப்பு - -விக்கிரவாண்டி இடையே 65.96 கி.மீட்டர் துாரம் ஒரு தொகுப்பாகவும் பிரிக்கப்பட்டு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிலையில் படேல் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த இரண்டு தொகுப்புகளுக்கான பணிகள் நிறைவடைந்தது.ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்த ஒப்பந்தப் பணிகள் 45 சதவீதம் கடந்த நிலையில் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது. இதனால் டெண்டரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன் ரத்து செய்தது. இருப்பினும், மறு டெண்டர் விடப்பட்டு, அந்த பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், தஞ்சாவூர் -- சோழபுரம் இடையே சாலைப்பணிகள் நிறைவு பெற்று, வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் பாபநாசம் அருகே வேம்புக்குடியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இந்த சுங்கச்சாவடி வரும் ஜன.20ம் தேதிக்கு பின்னர் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதில், வணிக உபயோகம் அல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2024- -2025ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் 340 ரூபாய், மாதாந்திர கட்டணம் பாஸ் தேவைப்படுவோர் சுங்கச்சாவடி அலுவலகத்தை அணுக வேண்டும் எனவும், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தஞ்சாவூர் - விக்கிரவாண்டி திட்ட இயக்குநர் செல்வகுமார் கூறியதாவது: தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலையில், தற்போது தஞ்சாவூர்- சோழபுரம் இடையே முழுமையாக பணிகள் நிறைவடைந்து, அதில் வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில் பாபநாசம் அருகே வேம்புக்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.