பாசன பயன்பாட்டிற்கு கழிவுநீர் பயன்படுத்த மெகா திட்டம் ..: கம்பம் நகராட்சியில் பணிகள் துவக்கம்
கம்பம்: கம்பம் நகராட்சியில் தினமும் சேகரமாகும் 90 லட்சம் லிட்டர் கழிவு நீரை மறுசுழற்சி தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு செய்து பாசனத்திற்கு பயன்படுத்த 'மெகா' திட்டம், ஒன்றை செயல்படுத்த நகராட்சிகளின் இயக்குனரக உத்தரவுப்படி, நகராட்சி நிர்வாகம் பணிகளை துவக்கி உள்ளது.உள்ளாட்சிகளில் சேகரமாகும் குப்பையை கையாள்வதில் வருங்காலங்களில் மிகப் பெரிய சவால் ஏற்படும். இதனால்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகமானது. குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து, பிரச்னையை சமாளித்து வருகின்றனர். அதேபோன்று சாக்கடை கழிவு நீரை கையாள்வதும் தற்போது பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.பாதாள சாக்கடை உள்ள ஊர்களில் பிரச்னை இல்லை. பாதாள சாக்கடை இல்லாத ஊர்களில் சேகரமாகும் கழிவு நீரை சுத்திகரித்து, பாசனம், இதர தேவைகளுக்கு பயன்படுத்த நகராட்சிகளின் இயக்குனரகம் திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.அதன்படி கம்பத்தில் தினமும் சேகரமாகும் 90 லட்சம் லிட்டர் கழிவு நீர், நகரின் பல பகுதிகளில் இருந்தும் வெளியேறி ஊருக்கு கிழக்குத் திசையில் உள்ள வீரப்ப நாயக்கன்குளத்தில் சேகரமாகிறது. அந்த கழிவு நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் அவலம் உள்ளது.இதை தவிர்க்க தற்போது உத்தேச மதிப்பீடு ரூ.20 கோடியில் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு என, 'கன்சல்டன்ட்' நியமிக்க உள்ளனர். வீரப்ப நாயக்கன் குளத்தை ஒட்டி 2.5 ஏக்கர் நிலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. நகரில் சேகரமாகும் கழிவு நீர், இங்குள்ள பிளாண்டில் சுத்திகரிக்கப்பட்டு, பின் பாசனம், இதர தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மெகா திட்டத்தில் நகரில் 5 இடங்களில் இருந்து குழாய்கள் மூலம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும், சுமார் 5 கி.மீ., நீளத்திற்கு நகருக்குள் இதற்கென குழாய்கள் பதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் நகரின் நீண்ட நாள் பிரச்னை, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது. நகராட்சி பணிகளை துவக்கி உள்ளது.