| ADDED : ஏப் 04, 2024 11:51 PM
ஆண்டிபட்டி : தேனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி நேற்று ஆண்டிபட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் ஆண்டிபட்டி ஒன்றிய, நகரம் சார்பில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.பெண்கள் உட்பட ஏராளமான அ.தி.மு.க.,வினர் அப்பகுதியில் கூடி முன்னாள் அமைச்சர் உதயகுமார், வேட்பாளர் நாராயணசாமி வரவேற்க காத்திருந்தனர். அப்போது தேனி தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக கனிமொழி அந்த வழியாக காரில் சென்றார். போக்குவரத்து நெருக்கடியால் அவர் வந்த கார் மெதுவாக கடந்து சென்றது.அப்போது அங்கிருந்த அ.தி.மு.க.,வினர் கனிமொழியிடம் இரு விரலை காண்பித்து இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டனர். அதன் பின் சிறிது நேரத்தில் அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் வந்த வேனும் கூட்டத்தை கடக்க முடியாமல் மெதுவாக ஊர்ந்து சென்றது. அ.தி.மு.க.,வினர் அவரிடமும் இரு விரலை காண்பித்து இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டனர். காரில் இருந்த தினகரன் சிரித்தவாறே குக்கரை தூக்கி காண்பித்து அவர்களிடம் ஓட்டு கேட்டார். கனிமொழி, தினகரன் இருவரும் அடுத்தடுத்து கடந்து சென்ற சிறிது நேரத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் உதயகுமாருடன் வந்த அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம் செய்தார்.