| ADDED : ஏப் 05, 2024 06:21 AM
பெரியகுளம் : தேர்தலில் வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு வரவதற்கு முன் கொட்டு, டிரம்ஸ் இசைத்து கூட்டம் திரட்டுவதால் டிரம்ஸ் கலைஞர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.தேனி லோக்சபா தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 7:35 மணிக்கு பிரச்சாரத்தை துவங்கும் வேட்பாளர்கள்மதியம் 1:00 மணி முதல் 3:00 மணி வரை உணவு இடைவெளியை தவிர இரவு 10:00 மணி வரை 30 முதல் 35 இடங்களில் பிரச்சாரம் செய்கின்றனர்.வேட்பாளர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்குள் பிரசார இடத்தில் மக்களை திரட்டி வைக்க வேட்பாளர்களுக்கு அரைமணிநேரத்திற்கு முன் வேனில் சென்று கொட்டு' மற்றும் டிரம்ஸ் இசைக்க ஆரம்பிக்கின்றனர்.டிரம்ஸ் இசையில் உற்சாகமாகும் பொதுமக்கள் அதற்கேற்ப ஆடி, பாடி சிலர் மகிழ்கின்றனர். இதனால் நிர்வாகிகள், தொண்டர்கள் கலைந்து செல்லாமல் இசையை கேட்டு உற்சாகம் அடைகின்றனர். வேட்பாளர் வந்த பிறகு அடுத்த பாயிண்டிற்கு செல்கின்றனர். ஆறு பேர் முதல் எட்டு பேர் கொண்ட கலை குழுவினர்களுக்கு தினமும் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. வேட்பாளர் 'குஷி' மனநிலையை பொறுத்து டிப்ஸ் ரூ 1000 முதல் ரூ. 2000 கூடுதலாக கிடைக்கிறது.டிரம்ஸ் அமைப்பாளர் சீலையம்பட்டி நாதமுனி கூறுகையில்: வேட்பாளருக்கு என்ன வரவேற்பு கொடுக்கணும் அதற்கு நிகராக எங்களை இசைக்கு வரவேற்பு உள்ளது. தற்போது பங்குனி திருவிழாக்கள் ஏராளமாக நடந்து வருவதால், காலை முதல் இரவு 9:30 மணி வரை வேட்பாளருடன் சென்று விட்டு, இரவு 10:30 மணிக்கு மேல்திருவிழாவிற்கு இசைக்க சென்று விடுவோம். இதனால் எங்களுக்கு தினமும் இரட்டிப்பு வருமானமாக தலா ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை கிடைக்கிறது என்றார். தேனி மாவட்டத்தில் அனைத்து டிரம்ஸ் கலைஞர்களும் தேர்தலை முன்னிட்டு பிஸியாக உள்ளனர் என்றார்.