| ADDED : ஜூன் 07, 2024 06:49 AM
தேனி: தேனியில் பெண்ணிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல், ஜாதியை கூறி தாக்கிய கொடுவிலார்ப்பட்டி ஐயப்பராஜ்க்கு ஆறு மாத சிறை, 16 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.கொடுவிலார்பட்டி ஐயப்பராஜ் 42. இவர் தேனி பாரஸ்ரோட்டில் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நண்பர் கோவிந்தநகரம் பிரேம்குமார். இவர்கள் இணைந்து சின்னமனுார் அப்பிபட்டி ராஜேஸ்வரி 47, மகன்கள் பிரபாகரன், பிரசாந்த் ஆகியோருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ. 3 லட்சம் ஆகும் என கூறினர். முன்பணமாக ரூ.1.5 லட்சம் தர கூறினர். இதனை நம்பிய ராஜேஸ்வரி ஐயப்பராஜிடம் 2017 ஜூன், ஜூலையில் ரூ. 1.66 லட்சம் கொடுத்தார். வேலை வாங்கி தராததால் பணத்தை திருப்பி கேட்டார். பிரேம்குமார் பணத்தை வாங்கி உள்ளார். அவரிடம் இருந்து பணத்தை பெற்றத்தருவதாக ஐயப்பராஜ் இரு செக் கொடுத்தார். அதில் ரூ.68 ஆயிரம் மதிப்புள்ள செக் பணம் இல்லாமல் திரும்பியது. இது குறித்த கேட்ட ராஜேஸ்வரியை ஜாதியை கூறி திட்டி ஐயப்பராஜ் தாக்கினார். ராஜேஸ்வரி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்தனர். இவ்வழக்கில் குற்றவாளி ஐயப்பராஜ் என்பவருக்கு 6 மாத சிறை, ரூ. 16ஆயிரம் அபராதம் விதித்து தேனி சிறப்பு நீதிமன்ற மூத்த நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.