மனைவிக்கு கொடுமை செய்த ராணுவ வீரர் உட்பட 5 பேர் மீது வழக்கு
தேனி, : தேனியில் ஆண்குழந்தை இல்லை என மனைவி சந்திரபிரபாவை 26, கொடுமை செய்த ராணுவ வீரர் மதன்கோபால் 33,அவரது தாய், தந்தை உட்பட 5 பேர் மீது தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தேனி வடபுதுப்பட்டி மதன்கோபால், ராணுவ வீரர். இவரது மனைவி சந்திரபிரபா. இவர்களுக்கு 2019ல் திருமணம் நடந்தது.தற்போது இரு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது சந்திரபிரபாவிற்கு அவரது பெற்றோர் 40 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கினர். மேலும் மதன்கோபாலுக்கு செயின், மோதிரம் என ஐந்தேமுக்கால் பவுன் நகை அணிவித்தனர். இவர் பஞ்சாபில் பணிபுரிந்தபோது சந்திரபிரபாவும் உடன் சென்றார். அவரது 30 பவுன் நகையை மாமனார் வீரதாஸ் 62, மாமியார் முருகேஸ்வரியிடம் வழங்கி சென்றார். இந்த நகையை கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் முருகேஸ்வரி, இவரது மகன் கிருஷ்ணன் அடகு வைத்தனர்.மேலும் கணவர், அவரின் தாய், தந்தை, தம்பி, பாட்டி பொம்மி 68, ஆகியோர் ஆண்குழந்தை இல்லை என துன்புறுத்தி வந்தனர்.கடந்த ஜனவரியில் மாமியார், மாமனார் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து கூடுதலாக நகை, பணம் வழங்க கோரியும், பெண்குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியே செல்ல கூறி திட்டி, தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.சந்திரபிரபா தேனி எஸ்.பி.,க்கு கடிதம் மூலம் புகார் அனுப்பினார். இதனை தொடர்ந்து தேனி மகளிர் போலீசார் ராணுவ வீரர், அவரது தாய்,தந்தை, தம்பி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.