வீட்டை சேதப்படுத்திய சக்கை கொம்பன் மதம் பிடித்துள்ளதாக வனத்துறை தகவல்
மூணாறு : மூணாறு அருகே சின்னக்கானல் 301 காலனியில் சக்கை கொம்பன் ஆண் காட்டு யானை வீட்டை சேதப்படுத்தியது. அந்த யானை மதம் பிடித்ததற்கான அறிகுறியுடன் சுற்றித்திரிவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் சக்கை (பலாப்பழம்) கொம்பன் பெரும் அச்சுறுத்தலுடன் நடமாடி வருகின்றது. அந்த யானை தாக்கி பலத்த காயம் அடைந்த முறிவாலன் (முறிந்தவால் ) கொம்பன் சிகிச்சை பலனின்றி ஆக.31 நள்ளிரவில் இறந்தது.அச்சம்வத்திற்கு பிறகு சின்னக்கானல் பகுதியில் சுற்றித்திரிந்த சக்கை கொம்பன் நேற்று முன்தினம் இரவு 301 காலனி பகுதிக்குச் சென்றது. அங்கு சபாஸ்டியன் வீட்டை சேதப்படுத்தியது. அவர், மனைவியுடன் முரிக்காசேரிக்குச் சென்றதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் நேற்று அதிகாலை 3:00 மணி வரை யானை நடமாடியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். அந்த யானை மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித்திரிவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.